அறிவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அறிவு என்பது ஒரு மனிதனை பற்றியோ, ஒரு நிறுவனம் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றி தெரிந்து இருப்பது ஆகும். இந்த அறிவை நாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களில் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களாலோ பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.