பன்னாட்டு அணுசக்தி முகமையகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency) என்பது அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், அணுக்கருவிகளின் இராணுவப் பயன்பாடுகளை தடுக்கவும் ஜூலை 29, 1957 அன்று நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மறைந்த அமெரிக்க குடியரசுத்தலைவர் ஐசனோவர் அவர்கள் ஐக்கிய நாடுகள் பொதுமன்றத்தில் 1953-ஆம் ஆண்டு ஆற்றிய அமைதிக்கான அணுக்கள் எனும் உரையில் அணு சக்தியின் பயன்பாட்டினை கட்டுப்பாட்டுடன் வளர்க்க இப்பன்னாட்டு அமைப்பை உருவாக்கும் ஆலோசனையை முன்வைத்தார். 2005-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கும் இதன் தலைவர் மொகம்மது எல்பரதேய் என்பவருக்கும் கூட்டாக வழங்கப்படுவதாக அக்டோபர் 7, 2005 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[தொகு] உள்ளமைப்பு
பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் (ப.அ.மு) செயலகமானது ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் உள்ள வியன்னா பன்னாட்டு மையத்தில் தலைமை கொண்டுள்ளது. இத்துடன் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனெவா, அமெரிக்க ஒன்றியத்தின் நியு யார்க், கனடா நாட்டின் டொரொன்டோ மற்றும் ஜப்பான் நாட்டின் டோக்கியோ ஆகிய நகர்களில் இவ்வமைப்பின் துணை அலுவலகங்கள் குடிகொண்டுள்ளன. மேலும் இவ்வமைப்பின் பல்வேறு ஆய்வு மையங்கள் மற்றும் அறிவியல் கூடங்கள் மொனாகோ அரசகத்திலும், ஆஸ்திரியா நாட்டின் வியன்னா மற்றும் சைபெர்ஸ்டோர்ஃப் நகரங்களிலும், இத்தாலி நாட்டின் திரெஸ்தே நகரிலும் உள்ளன.
ப.அ.மு செயலகத்தில் 2200 பல்தொழில் வல்லுனர்களைக் கொண்ட குழு இயங்கி வருகிறது. இவ்வமைப்பின் தலைமை இயக்குனரான மொகம்மது எல்பரதேய்-இன் கீழ் ஆறு துணை இயக்குனர்கள் பல்வேறு துறைகளை தலைமை தாங்கி வருகின்றனர்.
[தொகு] பணிகள்
பன்னாட்டு அணுசக்தி முகமையகமானது அணுத்தொழில்நுட்பத்தை அமைதிவழியில் பயன்படுத்தும் பொருட்டு அரசுகளுக்கிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்தும் மன்றமாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் முப்பெரும் தூண்கள் என்று போற்றப்படும் முதன்மை கடமைகள் இவைகளே:
1. வரைமுறைகளை பேணுதல் மற்றும் சோதித்தல்: ப.அ.மு. கிட்டத்தட்ட 140 நாடுகளுடன் கொண்டுள்ள வரைமுறை உடன்பாடுகளின்படி அந்நாடுகளின் அணு மற்றும் அணு சார்ந்த நிலையங்களில் சோதனை மேற்கொள்கிறது. ஏறத்தாழ அனைத்து உடன்பாடுகளும் அணு ஆயுதங்களைப் பெறோம் என்று உறுதி பூண்ட நாடுகளுடனேயே உள்ளன.
2. காவல் மற்றும் பாதுகாப்பு பேணுதல்: உலக நாடுகளின் அணு கட்டுமானம் தொடர்பான பாதுகாப்பு மற்றும் காவலை மேம்படுத்தவும், இடர் வருங்கால் சரியான முறையில் எதிர்கொள்ளவும் ப.அ.மு. உதவுகிறது. கேடு விளைவிக்கும் அணுக்கதிர் வீச்சிலிருந்து மக்களையும் சுற்றுச்சூழலையும் காப்பது முதன்மைக் குறிக்கோளாகும்.
3. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பேணுதல்: வளரும் நாடுகளின் இன்றியமையா தேவைகளுக்கு அமைதிவழியில் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு உலகின் முன்னோடியாக ப.அ.மு. திகழ்கிறது. இப்பணியானது வறுமை, நோய்நொடிகள், சுற்றுச்சூழற்கேடு போன்றவற்றை எதிர்த்து போரிடவும் நிலையான வளர்ச்சியை பெருக்கவும் பங்களிக்கிறது.